Thursday, November 13, 2025

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

– தமிழ்நாடு மாநிலக் குழு

சென்னையில் நடைபெறும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிகழ்வில் இஸ்ரேல் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது

சென்னை பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிகழ்வு

நாளை (07.10.2025) முதல் 09.10.2025 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறும் வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப வணிக நிகழ்வில் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் அரசு நிறுவனங்கள் பங்கேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட பல ஆண்டுகளாக தாயக உரிமைக்காக போராடி வரும் பாலஸ்தீன மக்கள் மீது, இஸ்ரேல் இனவெறி அரசு வரலாறு காணாத வன் தாக்குதலை நடத்தி வருகிறது.

மருத்துவ மனைகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தையும் அழித்தொழித்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் இனவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. அண்மையில் அந்த நாட்டின் தலைவர் நெதன்யாகு, ஐநா அவையில் உரையாற்றிய போது, பெரும்பாலான நாட்டு தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். “இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் காஸா மூச்சுத் திணறும் போது, உலகம் பாராமுகமாக இருக்கக் கூடாது” என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.


உலக நாடுகள் புறக்கணித்து வரும் இனவெறி இஸ்ரேல் அரசையும், அதன் நாசகார விளைவுகளையும் கண்டித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில், சென்னையில் நடக்கும் உலகளாவிய வணிக நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு தமிழ்நாடு அரசையும், முதலமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்வதுடன் நிகழ்வுக்கு பொறுப்பேற்றுள்ள டிட்கோ இது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு மாநிலக்குழு