தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27.09.2025) மாலை கரூர் நகரில் சாலை வழிப் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அவரது பரப்புரை நிகழ்வில் பங்கேற்கவும், அவரை நேரில் காணவும் திரண்ட மக்கள் கூட்ட நெரிசலில் இதுவரை பெண்கள், குழந்தைகள் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வரும் துயரச் செய்தி நெஞ்சைப் பிளக்கும் வேதனையளிக்கிறது. மேலும் பலர் மயங்கி விழுந்த நிலையில் அரசு மருத்துவ மனை உட்பட பல மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்த முதலமைச்சர், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் தடையின்றி கிடைக்க உத்தரவிட்டுள்ளதுடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 1 லட்சம் என முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டிருப்பது ஆறுதல் அளிக்குகிறது.
இருப்பினும் விஜய் சாலை வழிப் பரப்புரைக்கு காவல்துறை வழங்கிய இடம் பொருத்தமானதா? கூட்டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்பிடப்பட்டதா? என்பது போன்ற வினாக்கள் எழுகின்றன. இவைகள் மீது முழுமையான விசாரணை நடத்துவது அவசியமாகும். ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது அரசுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கடமைப் பொறுப்பாகும்.
உயிரிழந்தோர் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்திக்க கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் முன்னணி நிர்வாகிகள் நாளை (28.09.2025) கரூர் மாநகருக்கு செல்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறது.
மு. வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்.விஜய் சாலை பரப்புரை